இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை திடீர் சரிவு - காரணம் என்ன தெரியுமா?
- கடந்த மே மாதம் 1 லட்சத்து 05 ஆயிரம் யூனிட்கள் விற்பனையானது.
- இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிய தொடங்கி உள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தை கடந்த சில மாதங்களாக விற்பனையில் அசுர வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. இனி வரும் மாதங்களில் இந்த நிலை முழுமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த மானியம் குறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 2023 மாதத்தில் மட்டும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை 60 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. 2013 ஆண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை 2 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 7.4 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், தான் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை சரியத் தொடங்கி உள்ளது.
கடந்த மே மாதம் 1 லட்சத்து 05 ஆயிரம் யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூன் மாத விற்பனை 35 ஆயிரத்து 464 ஆக சரிந்துள்ளது. இது மாதாந்திர அடிப்படையில் 57 சதவீதம் குறைவு ஆகும். ஏப்ரல் மாதத்தில் 66 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகரித்த நிலையிலேயே உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பலர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க ஆரம்பித்தனர்.
விற்பனை கணிசமாக அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கி வந்த மானிய தொகையை குறைத்து விட்டது. ஜூன் 1-ம் தேதி மானிய குறைப்பு அமலுக்கு வந்த நிலையில், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை குறைய தொடங்கி இருக்கிறது.