இது புதுசு

மாருதி சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-01-28 19:23 IST   |   Update On 2023-01-28 19:23:00 IST
  • மாருதி சுசுகி நிறுவனம் தனது eVX கான்செப்ட் ப்ரோடக்‌ஷன் வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது.
  • 2030 வாக்கில் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு கொண்டுவர மாருதி சுசுகி திட்டம்.

மாருதி சுசுகியின் தாய் நிறுவனமான சுசுகி கார்ப்பரேஷன் அடுத்த சில ஆண்டுகளுக்கான வாகன திட்டமிடல் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதுபற்றி அந்நிறுவனம் சமர்பித்து இருக்கும் ஒழுங்குமுறை விண்ணப்பத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதைத் தொடர்ந்து 2030-க்குள் மேலும் ஐந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் 2025 ஆண்டில் தான் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் தனது eVX கான்செப்ட்-ஐ காட்சிக்கு வைத்தது.

எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டு மாருதி சுசுகி அறிமுகம் செய்த முதல் வாகனம் இது ஆகும். இந்த காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அளவில் 4.3 மீட்டர்கள் நீளமாக இருக்கும் என்றும் இதில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டிருக்கும் என மாருதி சுசுகி அறிவித்து விட்டது.

15 சதவீதம் முழு எலெக்ட்ரிக் வாகனங்கள், மாற்று எரிபொருள் அதாவது பயோகியாஸ் மற்றும் எத்தனால் சேர்க்கப்பட்ட எரிபொருள் கொண்ட மாடல்கள் 60 சதவீதம், ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்ட மாடல்கள் 25 சதவீதம் என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் மாருதி சுசுகி தொடர்ந்து கவனம் செலுத்த இருக்கிறது.

பயோகியாஸ் சார்ந்த எரிபொருளை ஊக்குவிக்கும் வகையில், சுசுகி கார்ப்பரேஷன் நிறுவனம் மத்திய அரசுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக சுசுகி சார்பில் பயோகியாஸ் சோதனை திட்டம் துவங்கப்பட இருக்கிறது. இதற்கான யூனிட் முதற்கட்டமாக குஜராத்தில் கட்டமைக்கப்படுகிறது. இது 2024 வாக்கில் பயன்பாட்டுக்கு வரும்.

இதுதவிர சுசுகி மற்றும் டொயோட்டா இடையேயான கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவில் மாடல்களை பகிர்ந்து கொள்வதோடு, இரு நிறுவனங்கள் இணைந்து புதுவித ஆட்டோமோடிவ் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளன. 

Tags:    

Similar News