சினிமா
மீடூ விவகாரம் - மேனகா காந்தியிடம் சின்மயி புகார்
மீடூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது புகார் அளித்து எந்த பயனும் இல்லாததால், மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் சின்மயி புகார் அளித்துள்ளார். #MeToo #Chinmayi #ManekaGandhi
பெண்கள் தங்கள் துறைகளில் இருக்கும் ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கப்பட்டது மீடூ இயக்கம். சர்வதேச அளவில் பிரபலமான இந்த இயக்கம் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறினார்.
சின்மயி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் இந்த விவகாரம் குறித்து அவர் மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் புகார் அளித்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை மந்திரியான மேனகா காந்தியை குறிப்பிட்டு சின்மயி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், “வைரமுத்து மீது நான் புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து (டப்பிங் யூனியன்) நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்கு பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதி அளிப்பது இல்லை. எனக்கு ஒரு தீர்வு அளியுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சின்மயி பதிவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி அளித்த பதில் ட்விட்டில், “உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை செய்தியில் அனுப்பவும்” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் ட்விட்டுக்குப் பதிலளித்த சின்மயி, “என்னைப் போலவே பல பெண்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், தொழிலுக்காகவும் பயப்படுகின்றனர். வைரமுத்து மட்டும் அல்லாமல் சினிமா துறையில் பல ஆண்களால் பெண்கள் அஞ்சுகின்றனர். எங்கள் அனைவருக்குமே தீர்வு வேண்டும். உங்களது பதில் ட்விட்டைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். #MeToo