சினிமா செய்திகள்

சினிமாவில் எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்- யோகி பாபு

Published On 2023-01-30 11:48 IST   |   Update On 2023-01-30 11:48:00 IST
  • இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
  • இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம் குமார், அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

இப்படம் வருகிற பிப்ரவரி-3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் யோகிபாபு, அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதில் யோகிபாபு பேசியதாவது, "இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

 

இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க" என்றார்.

Tags:    

Similar News