சினிமா செய்திகள்

ரூ.10 கோடி இழப்பீடு கேட்ட ஏ.ஆர்.ரகுமான்- ஏன் தெரியுமா?

Published On 2023-10-04 05:46 GMT   |   Update On 2023-10-04 05:46 GMT
  • விநாயகக் செந்தில் என்பவர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தார்.
  • இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு 'அசோசியேஷன்ஸ் ஆப் அறுவை சிகிச்சை இந்தியா' என்ற அமைப்பினர் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஏ.ஆர்.ரகுமானை புக் செய்து முதற்கட்டமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை அசோசியேஷன் கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த அப்போதைய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நடக்காததால் முதற்கட்டமாக கொடுத்த தொகையை அசோசியேஷன், ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். இந்த காசோலையை பல முறை வங்கியில் செலுத்தியும் பவுன்ஸ் ஆனதால் இது நிலுவையில் இருந்தது.

கடந்த 5 வருடமாக ரூ. 29 லட்சத்தி 50 ஆயிரத்தை திருப்பி கொடுக்கப்படாமல் இருந்ததால் இது தொடர்பாக அந்த அசோசியேஷனின் அமைப்பு செயலாளர் விநாயகக் செந்தில் என்பவர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது செயலாளர் செந்தில் வேலவன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரளித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்தால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு என்றும் தன்னுடைய நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். தனக்கு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை நான் பெறவில்லை. மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள அந்த சங்கம் தேவையில்லாமல் தன் பெயரை களங்கப்படுத்தும் விதமாக புகாரளித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் அளித்த நோட்டீஸை 3 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். அதோடு ரகுமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், தவறினால் சட்ட ரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tags:    

Similar News