எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன்.. பிதாமகன் தயாரிப்பாளருக்கு உதவி செய்யும் ரஜினி
- தமிழில் பிதாமகன் ,லவ்லி, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை
- இவர் சில தினங்களுக்கு முன்பு தனக்கு உதவி செய்யுமாறு விடியோ ஒன்றை வெளியிட்டு உதவி கேட்டார்.
விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' விக்ரம், சூர்யா நடித்த 'பிதாமகன்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து உள்ளார். சமீபத்தில் வி.ஏ. துரை வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தார்.
தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து, தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் இருப்பினும் தனது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படுவதால் திரையுலகினர் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் தயாரிப்பாளர் விஏ துரையின் மருத்துவச் செலவுக்காக நடிகர் சூர்யா. கருணாஸ் உள்ளிட்டோர் 2 லட்சம் வழங்கினார்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் அவரிடம் கூறியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ.5 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளார்.