கார் மோதி பெண் பலியான சம்பவம்.. இர்பானுக்கு மேலும் ஒரு சிக்கல்
- யூடியூபரான இர்பான் கார் மோதி பெண் ஒருவர் பலியானார்.
- இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி அருகே உள்ள கோனாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25-ஆம் தேதி இரவு அவரது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகர் பகுதிக்கு சென்றுவிட்டு கோனாதியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பும் போது மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
பத்மாவதி -இர்பான்
இந்த விபத்தில் சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பது தெரியவந்தது.
மேலும், இந்த சம்பவத்தின் போது இர்பான் இந்த காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இர்பானின் காரை பறிமுதல் செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கூடுவாஞ்சேரி போலீசார் உரிய ஆவணங்களை ஆர்டிஓ அலுவலகத்தில் வழங்காததால் அதிகாரிகள் காரை திருப்பியனுப்பியுள்ளனர். தற்போது காரானது மீண்டும் போலீஸ் நிலையத்திற்கே வந்துள்ளது.