சினிமா செய்திகள்

வேங்கைவயல் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் ஏன்? - நடிகர் பார்த்திபன் கேள்வி

Published On 2025-01-25 08:18 IST   |   Update On 2025-01-25 11:24:00 IST
  • வேங்கைவயல் வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
  • அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் கால தாமதம் ஏன் என்று சாத்தூரில் பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "வேங்கைவயல் விவகாரத்தில் 2 பேரை குற்றவாளிகள் என பதிவு செய்வதற்கு ஏன் எவ்வளவு கால தாமதம் ஆனது. காவல்துறையினருக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளது. இந்த அழுத்தங்களால் புதிய புதிய விவகாரங்கள் வரும் போது பழைய பிரச்சனைகள் மிக பழைய விஷயமாகி விடுகின்றன.

தற்போது இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இனிமேல் இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதே சமயம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக வரும்போது அதே விமர்சனத்தை வைக்கிறார்கள்.

இங்கே எதிர்ப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது. ஆகவே அரசை ஆதரித்து நல்ல விசயத்தை வாங்கி கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆனால் அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மக்கள் போராடிய பின்பு தான் தீர்வு கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News