சினிமா

பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் - பெண் இயக்குனர்கள் அறிவிப்பு

Published On 2018-10-15 11:44 IST   |   Update On 2018-10-15 11:44:00 IST
‘மீ டூ’ இயக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என மும்பையில் பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். #MeToo #MeTooIndia
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவை உலுக்கி வரும் இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு தனி குழு ஒன்றை நியமிக்கவுள்ளது. இது ஒருபுறம் இருக்க பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இனி இணைந்து பணிபுரிய மாட்டோம் என இந்தி பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர்.

பிரபல இந்திப்பட பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் இயக்குனர்கள் என்ற முறையில் ஒன்று சேர்ந்து ‘மீ டூ’ அமைப்புக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் அதை வெளிப்படையாகச் சொல்ல தொடங்கியிருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கப் புரட்சியாகும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகத் துணை நிற்போம். பெண்களுக்கு பணியிடங்களில் நேரும் கொடுமைகளுக்கு எதிராகவும், பாதுகாப்பு, சம உரிமை குறித்து இனி நாங்கள் பிரசாரம் செய்வோம். அதே நேரம் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுடன் இனி பணிபுரிய போவது கிடையாது.

இவ்வாறு அவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைக்கு வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. #MeToo #MeTooIndia

Tags:    

Similar News