ஜடேஜா, தேஷ்பாண்டே அபார பந்து வீச்சு: சிஎஸ்கே-வுக்கு 138 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
- ஜடேஜா 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
- தேஷ்பாண்டே 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்திலேயே சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுனில் நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி களம் இறங்கினார். முதல் ஓவரில் கொல்கத்தா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. 2-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
தேஷ்பாண்டே வீசிய 3-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது. 4-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரில் 13 ரன்கள் கிடைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓவரில் 50 ரன்கள் குவித்தது.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 200 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 7-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் ஜடேஜா திருப்புமுனை ஏற்படுத்தினார். முதல் பந்திலேயே ரகுவன்ஷியை எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்தினார். ரகுவன்ஷி 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே ஓவரின் 5-வது பந்தில் சுனில் நரைனை வீழ்த்தினார். அவர் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்து தீக்சனாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் கொல்கத்தா நைட் ரைடஸ் ரன்கள் அடிக்க திணறியது. ஜடேஜா மேலும் வெங்களடேஷ் அய்வரை 3 ரன்னில் வீழ்த்தினார். கொல்கத்தா நைட் ரைடர் 15.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
இதனால் 200 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 150 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது. ரிங்கு பாண்டு கடைசி நேரத்தில் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
16.5-வது ஓவரில் அந்த்ரே ரஸல் களம் இறங்கினார். 18-வது ஓவரை முஸ்தாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா அணியால் இந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. நோ-பால் பந்துடன் சேர்த்து ரஸல் 6 பந்துகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
19-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணிக்கு இந்த ஓவரில் 13 ரன் கிடைத்தது.
135 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரை கொல்கத்தா எதிர்கொண்டது. முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.