கோவில்கள்

குணசீலம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்

Published On 2022-09-19 05:21 GMT   |   Update On 2022-09-19 05:21 GMT
  • மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது.
  • இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார்.

மூலவர் - பிரசன்ன வெங்கடாஜலபதி

உற்சவர் - ஸ்ரீனிவாசர்

தீர்த்தம் - காவிரி, பாபவிநாசம்

ஆகமம்/பூஜை - வைகானஸம்

புராண பெயர் - பத்மசக்கரபட்டணம்

இந்தக் கோவிலில் உள்ள பெருமாள், தரைதளம் விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார். கோவிலின் அருகில் காவிரி நதியும் எதிர்ப்பக்கத்தில் பாபவிநாச அருவியும் உள்ளது. இந்த கோவிலில் தாயார் சன்னிதி கிடையாது. உற்சவரான ஸ்ரீநிவாசப்பெருமாள் மட்டும் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகின்றார். புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சுவாமி, குணசீலருக்கு காட்சியளித்த வைபவம் நடக்கும்...

மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.

தல வரலாறு

குணசீலர் என்று பெயர் கொண்ட பெருமாள் பக்தர் ஒருவர் காவிரிக்கரையில் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார். ஒருநாள் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து வந்த குணசிலருக்கு தன் ஆசிரமத்திலும், பெருமாள் எழுந்தருள வேண்டும் என்ற ஆசை வந்தது. தனது ஆசிரமத்தில் பெருமாளை வரவழைக்க கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவத்தின் மூலம் பெருமாள் குணசிலருக்கு காட்சியளித்து அந்த ஆசிரமத்திலேயே பிரசன்ன வெங்கடாஜலபதியாக இருந்து இன்று வரை தரிசனம் தருகின்றார். பெருமாலின் பக்தரான குணசீலரால் தான் இந்த பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது.

குணசீலரின் சேவை மற்றொரு ஆசிரமத்திற்கு தேவைப்பட்டதால், குணசீலர் தன் சீடனிடம் பெருமாளை ஒப்படைத்துவிட்டு பூஜைக்கான பொறுப்பையும் கொடுத்துவிட்டு, வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குணசீலம் ஒரு காடாக இருந்தது. வனவிலங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் குடிலை விட்டு சீடன் வேறு இடத்திற்கு சென்று விட்டான். அந்த குடிலில் பெருமாள் சிலை மட்டும் தனியாக இருந்த போது, புற்றினால் மூடப்பட்டுவிட்டது.

ஞானவர்மன் என்ற பெயர் கொண்ட மன்னன் அந்தப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம் அது. அரண்மனையின் பசுக்கள் அந்த காட்டில், புல் மேய்வதற்காக விடப்படும். தொடர்ச்சியாக அந்த காட்டினுள் சென்ற மாடுகளில் மடியில் இருந்து பால் கரப்பது இல்லை. இதற்கு காரணம் என்ன என்று அறிந்து கொள்வதற்காக, அந்த காட்டிற்குச் சென்ற மன்னனுக்கு ஒரு அசரீதி குரல் ஒலித்தது. அந்தக் குரலின் மூலம் புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்ந்த மன்னன் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு கோவில் எழுப்பினான்.

மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் குணசீலம் கோவில் விளங்குகிறது. குணசீல மகரிஷிக்கு முன்பாக திருப்பதி இறைவன் தோன்றினார் என்பதால், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் குணசேலனைப் பார்வையிட முடியுமென்று நம்புகிறார்கள்.

கோவில் அமைப்பு

கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர். வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார்.

கோவிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும்.

திருவிழா:

சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி. பிரம்மோற்ஸவத்தின் முக்கியத் திருவிழா, புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் – அக்டோபர்) 11 நாட்களுக்கு ஒன்பது நாள் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான கோவில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருட சேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு.

பலன்கள்

உடல் ஊனமுற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வாய் பேச முடியாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் சரியாகி விடும் என்பது நம்பிக்கை. கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜர் சீடர் சுருதிதேவனும், பகுவிராஜ மன்னன் கால் பாதிக்கப்பட்ட போதும் இந்தக் கோவிலுக்கு வந்து குணம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், வாய்பேச முடியாத நிலையில் இந்த கோவிலுக்கு வந்து பேசும் சக்தியைப் பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரிசன நேரம்:

காலை 6.30AM – 12.30PM மாலை 4.00PM – 8.30PM

கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யப்படுகின்றன; விஸ்வரூபம் – 6:30am. காலசந்தி – 8:30am. உச்சிகாலம் – 12:30pm. திருமல்வடை – 5:30pm. சாயரக் ஷை – 6:30pm. அர்த்தஜாமம் – 8:30pm. ஒவ்வொரு சடங்குகளும் நான்கு படிகள் உள்ளன – அபிஷேக (புனிதமான) குளியல், அலங்காரம், நெய்வேத்யம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை.

முகவரி:

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில்,

குணசீலம் 621 204,

திருச்சி மாவட்டம்.

Tags:    

Similar News