கோவில்கள்

மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில்- கேரளா

Published On 2022-06-30 08:21 GMT   |   Update On 2022-06-30 08:21 GMT
  • மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது.
  • கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம்.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பல்லசேனா என்ற ஊர். இங்கு மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

முன்னொரு காலத்தில் கடும் பஞ்சம் காரணமாக சிலர் பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு காணப்பட்ட செழிப்பு காரணமாக, அவர்களின் வணிகமும் செழித்து வளர்ந்தது. அதனால் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர். அவர்களில் மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு பெரியவர் குடும்பமும் இருந்தது.

அவர்கள் அவ்வப்போது மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசனம் செய்து வருவது வழக்கம். ஒரு முறை அவர் தன் குடும்பத்துடன் மீனாட்சியை தரிசித்து விட்டு ஊர் திரும்பினார். மறுநாள் பல்லசேனாவில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். குளத்தின் கரையில் குடையை விரித்து, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை அதன் அடியில் வைத்து விட்டு குளித்தார்.

கரைக்கு வந்து குடையை எடுக்க முயன்றபோது, அதை அசைக்கக் கூட முடியவில்லை. பொருட்களையும் எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாததால் பயந்து போன அவர், வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நடந்ததைச் சொன்னார். அவர்களும், விஷயத்தைக் கேள்விபட்ட ஊர் மக்கள் பலரும் அங்கு குவிந்தனர். அவர்களாலும் குடையையும், அதன் அடியில் இருந்த பொருட் களையும் அசைக்க முடியவில்லை.

அப்போது அங்கே ஒரு அசரீரி கேட்டது. "இந்த தள்ளாத வயதில் நீ என்னை தரிசிப்பதற்காக மதுரைக்கு வர வேண்டாம். உனக்காக நானே இங்கு வந்துள்ளேன். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டு" என்றது அந்தக் குரல். இதையடுத்து அந்தப் பெரியவரும், குடும்பத்தினரும் இணைந்து அங்கு அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். குடை மண்ணில் பதிந்து போனதால், இந்த பகுதிக்கு 'குடைமன்னு' என்ற பெயரும் உண்டு.

இந்த ஆலயத்தின் கொடி மரம் தேக்கு மரத்தால் ஆனது. இதை செப்புத் தகடு கொண்டு வேய்ந்துள்ளனர். கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம். இது தவிர சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், சாஸ்தா ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், மாசி மாதம் நடைபெறும் 8 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

Tags:    

Similar News