அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்
- இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது.
- மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.
சுவாமி : தேவி கருமாரியம்மன்.
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.
தலவிருட்சம் : கருவேல மரம்.
தலச்சிறப்பு :
இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும் செல்கின்றனர். இங்கு மிகப்பெரிய நாகப் புற்று உள்ளது. புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு. ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.
மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு. இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் தீர்த்தல், வியாதி, வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு :
அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான் மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ! வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது. சிவன் உலகை மீண்டும் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள்.
அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது. வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி 'தேவர் கண்ட மடு' என்று அழைக்கப்படுகிறது. இதுவே திருவேற்காடு வரலாறு. இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை, (குறிப்பு:- அர்த்தஜாம பூஜை ஞாயிறு இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது)
திருவிழாக்கள் :
சித்ராபௌர்ணமி,
ஆடித் திருவிழா(12 வாரங்கள்),
தைப்பூசம்,
மாசிமகம்,
ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோவில் முகவரி :
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்,
திருவேற்காடு – 600 077,
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம்.