வடிவீஸ்வரம் அழகம்மன் திருக்கோவில்- நாகர்கோவில்
- திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
- இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.
திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் அம்மன் தெற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருகிறார். அம்மன் அருகே வலது புறத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி தருகிறார். சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு முன்பு நந்தி பகவானும், அவருக்கு அடுத்து நேர் எதிரே அழகிய கொடி மரமும் அமைந்துள்ளது. இந்த கொடிமரத்தின் இடது புறம் கொடி மர முருகரும், வலது புறமும் கொடி மர விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள். கொடி மரத்தின் மேல் பகுதியில் கோவிலின் தளத்தில் நவ கிரகங்கள் காட்சி அளிக்கிறது.
கொடிமரத்தை தரிசிப்பவர்கள் நவக்கிரகங்கள் மற்றும் முருகர், விநாயகரை தரிசித்து விட்டு சன்னதிக்குள் நுழையலாம். அதன் பிறகு அழகம்மன், சுந்தரேஸ்வரரின் அருள் காட்சியை தரிசிக்கலாம்.
இந்த கோவிலில் சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், நாகராஜர், சாஸ்தா, காசி விஸ்வநாதர், வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சந்திரன், ஸ்ரீதேவி- பூதேவியுடன் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.
இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அழகம்மன் கோவிலில் ஆடி மாதம், ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே போல ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம் ஆகிய வையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது தேரோட்டமும், 10-ம் நாளில் அம்மனுக்கு ஆராட்டும் நடைபெறும். ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா ஆகியவை நடைபெறுகிறது.
கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கள் கிழமை தோறும் கடை பிடிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. அதே போல சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
மார்கழி மாதம் நடராஜருக்கு திருவாதிரை திருவிழாவும், ஆனி மாதம் நடராஜருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அதே போல வருஷாபிஷேகம் மற்றும் புனர்பூசமும் சிறப்புடன் நடைபெறுகிறது. அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 14-6-1991-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் 3 நிலைகளுடன் தெற்கு கோபுரமும் இங்கு அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. இந்த தெப்ப குளத்தின் கரையில் தான் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும்.
அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.