கோவில்கள்

வேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர் கோவில்- செய்யாறு

Published On 2022-06-24 09:38 IST   |   Update On 2022-06-24 09:38:00 IST
  • திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவில்.
  • தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தலமாகும்.

மூலவர் : வேதபுரீஸ்வரர், வேதநாதர்

அம்மன் : இளமுலையம்பிகை, பாலகுஜாம்பிகை

தல விருட்சம் : பனை மரம்

தீர்த்தம் : மானச தீர்த்தம், கல்யாண கோடி தீர்த்தம், திருக்குளம்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 84 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, செய்யாறு. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டரில் வேதபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரில் அமைந்துள்ள, வேதபுரீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240-வது தலமாகும். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தின் பொருளை விளக்கி அருளினார். இதனால் இத்தலம் 'திருவோத்தூர்' என்ற புராணப் பெயர் பெற்றது. தற்போது 'திருவத்திபுரம்' என்று அழைக்கப்படுகிறது.

இத்தல நந்தி, மூலவரைப் பார்க்காமல், வாசலை பார்த்தபடி இருக்கிறது. தேவர்களுக்கு, ஈசன் வேதம் ஓதிக் கொண்டிருக்கும்போது, வேறு யாரும் வந்து இடையூறு செய்துவிடக்கூடாது என்பதற்காக நந்தி இப்படி அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு மூலவரான வேதபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இங்கு 9 வாசல்களைக் கடந்துதான் மூலவரை தரிசிக்க முடியும். விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன் ஆகியோர், இங்குள்ள வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இந்த ஆலயத்தில் நாகலிங்க அபிஷேகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 11 தலைகொண்ட நாகலிங்கத்திற்கு சனிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

இத்தல மூலவரின் மீது ரதசப்தமி நாள் மட்டுமின்றி, நாள்தோறும் சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது விசேஷமானது. இவ்வாலயத்தின் 8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம். அதே போல் மகாமண்டபத்தின் ஓரிடத்தில் நின்றபடி, சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவக்கிரகங்கள், தல மரம் ஆகியவற்றை தரிசிக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள பஞ்சபூதத் தலங்களின் சன்னிதிகள் அனைத்தும் இங்கு காணப்படுகின்றன.

எனவே, இத்தலத்தில் வழிபட்டால் பஞ்ச பூதத் தலங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்குள்ள செய்யாற்றின் கரையில் ஒரு சிவனடியார் பனை மரங்களை நட்டார். அவை அனைத்தும் ஆண் பனை என்பதால் பூத்து, காய்க்கவில்லை. ஒரு முறை திருஞானசம்பந்தர் இங்கு வந்தபோது, பதிகம் பாடியதையடுத்து ஆண் பனை அனைத்தும் பெண் பனையாக மாறி பூத்து காய்த்துக் குலுங்கின. இந்த அதிசயம் நிகழ்ந்த தலம் இதுவாகும்.

வழிபாட்டு பலன்

* சுவாமி-அம்பாளை வழிபட மனத்துயர் நீங்கும்

* நாகலிங்க அபிஷேகம் செய்தால் திருமணத்தடை விலகும்

* இத்தல பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபேறு வாய்க்கும்

* வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு கிடைக்கும்.

Tags:    

Similar News