ஆன்மிகம்

சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் சிவாலய ஓட்டம்

Published On 2018-02-12 15:10 IST   |   Update On 2018-02-12 15:10:00 IST
மகா சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவாலய ஓட்டம் குறித்து இரண்டு விதமான கதைகளை பார்க்கலாம்.
மகா சிவராத்திரி அன்று சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அந்த நாளில் குமரி மாவட்டத்தில் மட்டும் நடக்கும் சிவராத்திரி ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடியேச் சென்று வழிபடுவது தான் சிவராத்திரி ஓட்டம் என அழைக்கப்படுகிறது.

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஏகாதசி நட்சத்திரத்தில் விரதத்தை தொடங்குவார்கள். அவர்கள் காவி வேட்டி, காவி துண்டு அணிந்து கொண்டு கோவில்களில் காணிக்கையிட சிறு துணிப்பையில் பணமும் வைத்திருப்பர். கையில் விசிறியுடன் கோவிந்தா, கோபாலா என்றும் அப்பனே சிவனே வல்லபா என்றும் கோஷம் எழுப்பியபடி ஓடிய படியும் நடந்தும் 12 சிவாலயங்களுக்கும் சென்று வழிபடுவர்.

சிவாலய ஓட்டம் முன்சிறை திருமலை சிவன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. மகாசிவராத்திரிக்கு முந்தைய தினம் இந்த ஓட்டம் தொடங்கும். அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களின் மொத்த தூரம் 102 கிலோ மீட்டர் ஆகும்.

சிவாலய ஓட்டம் குறித்து இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன.


மகாபாரத யுத்தம் முடிந்ததும் தர்மர் தன் பாவத்தை தொலைக்க யாகம் செய்ய விரும்புகிறார். யாகத்தை நடத்திய முனிவர், தர்மர் நடத்தும் யாகத்தில் சொரிவதற்கு மனிதனும், சிங்கமும் கலந்த புருஷாமிருகத்தின் பால் வேண்டும் என்று கேட்கிறார். அதிக பலமும், கொடூரமான குணமும் கொண்ட அந்த மிருகத்திடம் பீமனை தவிர வேறு யாரும் நெருங்க முடியாது என்கிறான் கண்ணன். பீமன் முதலில் புருஷா மிருகத்திடம் பால் கறக்கத் தயங்கினாலும் கண்ணன் அளித்த ஆதரவால் அதற்கு இணங்குகிறான்.

கண்ணன் பீமனிடம் 12 உத்திராட்சங்களை கொடுக்கிறான். பீமா இந்த புருஷா மிருகம் சிவனை தவிர வேறு யாரையும் வணங்காது. விஷ்ணுவின் நாமம் கேட்டாலே அதற்கு கோபம் வந்து விடும். அதனால் நீ கோபாலா, கோவிந்தா என்று சொல்லிக் கொண்டு போ, அது உன்னை துரத்தும். அப்போது இந்த உத்திராட்சத்தை தரையில் வை. இது சிவலிங்கமாக மாறும்.

உடனே அந்த மிருகம் லிங்க பூஜை செய்ய ஆரம்பித்து விடும். அந்த நிலையில் அது மயங்கி நிற்கும். நீ உடனே அதனிடம் பால் கறந்து விடலாம் என்று சொல்லுகிறான். பீமனும் கண்ணன் கொடுத்த உத்திராட்சங்களு டன் புறப்பட்டான். புருஷா மிருகத்தை பார்த்ததும் கோவிந்தா, கோபாலா என்று கூறினான். மிருகம் கோபத்துடன் பீமனை கொல்ல வந்தது. பீமன் ஓட ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் போனதும் களைத்தான். அப்போது உத்திராட்சத்தை தரையில் போட்டான். அது சிவலிங்கமானது. புருஷா மிருகம் அதை பார்த்ததும் நின்று விட்டது. தவம் செய்ய ஆரம்பித்தது.

அது மயங்கிய நேரத்தில் பீமன் கோவிந்தா, கோபாலா, என்று சொல்லிக்கொண்டே மிருகத்திடம் பால் கறக்க ஆரம்பித்தான். அது விழித்துக்கொண்டது. அவனை துரத்தியது. அவன் ஓட ஆரம்பித்தான். ஓட முடியாத நிலையில் பீமன் உத்திராட்சத்தை கீழே வைத்தான். இப்படியாக 12 உத்திராட்சங்களையும் தரையில் வைத்தான். உத்திராட்சங்கள் தீர்ந்த பிறகு வேறு வழியில்லாமல் பீமன் வேகமாக ஓடினான். மிருகம் துரத்தியது.

அவன் அந்த மிருகத்திற்கு சொந்தமான காட்டிற்கே சென்று விட்டான். பீமன் ஒரு காலை மிருகத்துக்கு சொந்தமான காட்டில் பதித்தான். மிருகம் அந்த காலை பற்றிக்கொண்டு பீமன் எனக்கே சொந்தம், என் பூமியில் அவன் கால்பட்டு விட்டது என்றது. பீமனால் மிருகத்தின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை.

இந்தநிலையில் தர்மர் அங்கே வந்தார். மிருகத்திற்கு சொந்தமான காட்டில் பதிந்திருந்த பீமனின் காலை புருஷா மிருகம் எடுத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறினார். இந்த சமயத்தில் 12 உத்திராட்சங்களும் 12 விஷ்ணு உருவங்களாக மாறியதை புருஷாமிருகம் அகக்கண்ணால் கண்டது. அதற்கு ஞானம் வந்தது. பீமனும் தான் வலிமை உடையவன் என்ற அகங்காரத்தை ஒழித்தான். பீமன் ஸ்தாபித்த 12 லிங்கங்களும் 12 சிவாலயங்களாக மாறின.

இவ்வாறு முதல் உத்திராட்சம் விழுந்த இடம் தான் முன்சிறை. 12-வது உத்திராட்சம் விழுந்த இடம் நட்டாலம். இங்கு ஹரியும், ஹரனும் இணைந்த சங்கரநாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்று புருஷாமிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். இதனால் தான் சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி சிவாலய ஓட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ஓட்டமாக மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்கள், கார், வேன், பஸ்களிலும் சென்று 12 சிவாலயங்களையும் பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.

Similar News