பிரம்மோற்சவம் 5-வது நாள்: பல்லக்கு, யானை வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா
- வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் `மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு சாஸ்திர பூர்வமாக மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய நறுமண திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.