திருப்பதியில் அனுமன் பிறந்ததாக கூறப்படும் இடத்தில் பக்தர்கள் குவிந்தனர்
- வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது.
- சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் சாலையில் உள்ள ஜபாலி மலையில் அனுமன் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
ஜபாலி மலையில் உள்ள அனுமனுக்கு இன்று காலை பல்வேறு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் உடுத்தி, வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவர் பிறந்த இடத்தில் சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
திருப்பதியில் நேற்று 84 950 பேர் தரிசனம் செய்தனர். 21,098 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 6 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.