மதுரை மாசி வீதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- வைகை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
- 108 சிறிய சிலைகளை பெண்கள் தூக்கி கொண்டு வந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் இந்து மக்கள் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் 1 அடி முதல் 9 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.. அதில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 19 பெரிய சிலைகள் மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட 108 சிறிய விநாயகர் சிலைகள் நேற்று மாலை கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக மாசி வீதியில் வலம் வந்தது. அதில் 108 சிறிய சிலைகளை பெண்கள் தூக்கி கொண்டு வந்தனர்.இதையொட்டி போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் விநாயகர் சிலைகள் அனைத்தும் சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியை வந்தடைந்தன. அங்கு சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக வைகை ஆற்றில் கரைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலங்கை முன்னாள் எம்.பி.யோகேஸ்வரன் மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.