மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-15)
- மாயக் கண்ணனைப் பாடி பாவை நோன்பு நோற்கலாம் விரைந்து வாருங்கள்!
- நம் பெருமான் பெருமைகளை வாயாரப் பாடி, இக்குளத்தில் நீராடுவோம் வாருங்கள்.
திருப்பாவை
பாடல்:
'எல்லே! இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ?'
'சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதர்கின்றேன்'
வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!''
'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!'
'ஒல்லைநீ போதாய்; உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' போந்தார் போந்து
எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
'ஏனடி ! இளமையான கிளி போன்ற பெண்ணே! இன்னமும் உறங்குகிறாயோ?' 'சிடுசிடுவென கூச்சல் போடாதீர்கள், மங்கையரே! இதோ புறப்பட்டு விட்டேன்!' 'உன் பேச்சின் வீரத்தை நாங்கள் முன்பே அறிவோம்!'
நீங்கள்தான் வாய்ப்பேச்சில் வலிமை உடையவர்கள். இருந்தாலும் உங்களைப் பொறுத்தவரை நானே இருந்து விட்டுப் போகிறேன்'. 'முதலில் நீ புறப்படு, உனக்கு மட்டும் தனியாகக் கூற வேண்டுமா?" 'எல்லோரும் வந்து விட்டார்களா?" "வந்தவர்களை நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவலயாபீடம் என்ற யானையைக் கொன்று, பகைவரின் செருக்கை அழித்த வல்லவனுமாகிய மாயக் கண்ணனைப் பாடி பாவை நோன்பு நோற்கலாம் விரைந்து வாருங்கள்!
திருவெம்பாவை
பாடல்:
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூற
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்
பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தான்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நம் பெருமானது சிறப்பை பேசும் ஒருத்தி ஒவ்வொரு கணமும் 'எம் பெருமான்' என்றே வாய் ஒயாது பேசிக் கொண்டு இருப்பாள். மனதில் ஆனந்தம் பொங்க, கண்களில் இருந்து கண்ணீர் நீண்ட தாரையாக தொடர்ந்து வழிந்து கொண்டிருக்கும். அவள் மண்ணில் உள்ளவர்களையும், தேவர்களையும் வணங்க மாட்டாள். அரசர்க்கெல்லாம் அரசராக விளங்குபவரின் மேல் இத்தனை பித்து பிடித்து அலையும் இந்த பெண்ணை ஆட்கொண்ட வித்தகராம், அந்த சிவபெருமானின் பெருமைகளை நாமும் பாடுவோம். மார்புகளில் கச்சை அணிந்த இளம் பெண்களே! நம் பெருமான் பெருமைகளை வாயாரப் பாடி, இக்குளத்தில் நீராடுவோம் வாருங்கள்.