வழிபாடு

கண்ணப்ப நாயனார் குருபூஜை

Published On 2024-01-22 02:30 GMT   |   Update On 2024-01-22 02:30 GMT
  • திண்ணன் என்பது இவர் பெயர்.
  • வேட்டை ஆடுவதில் சிறந்தவர்.

சைவ சமயத்தில் வண் தொண்டர்கள் என்று சில தொண்டர்களைக் குறிப்பிடுவார்கள். ஒருவர் கல்லால் அடித்தார். ஒருவர் வில்லால் அடித்தார். ஒருவர் காலால் உதைத்தார் என்று சிறப்பாகச் சொல்வதுண்டு. கல்லால் அடித்தவர் சாக்கியநாயனார். வில்லால் அடித்தவன் விஜயன். காலால் உதைத் தவர் கண்ணப்பன். ஆம் இவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் போல் பார்த்திருக்கவே முடியாது. ''கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்'' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ''நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்'' என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.

திண்ணன் என்பது இவர் பெயர். வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப் பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார்.

இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவ கோசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன்.

திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். கண்ணில் குருதி வடிவதைக் கண்டு திண்ணனார் அழுதார். இறைவனுக்கே இந்த நிலையா என்று தவித்தார். பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை. இதற்கு ஏதேனும் ஒரு வழி செய்தே தீர வேண்டும் என்று துடித்த அந்த துடிப்பில், தன் கண்ணை பறித்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது.

ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, "இது என்ன சோதனை?" என்று நினைத்த திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார். தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அம்பால், தன் கண்ணை பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார். ''கண் கொடுத்த அப்பா, கண்ணப்பா,'' என்று இறைவன் அழைத்து, "நில் கண்ணப்ப" என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார்.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை ''வா'' என்ற வான் கருணை

சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பி

கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாக மணிவாசகர் திருகோத்தும் பியில் குறிப்பிடுகின்றார். கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று.

Tags:    

Similar News