வழிபாடு

வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் வீதி உலா வந்த போது எடுத்தபடம்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

Published On 2022-11-30 03:22 GMT   |   Update On 2022-11-30 03:22 GMT
  • பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும்.
  • பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று காலை 10 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

பின்னர் அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் கோவிலில் நேற்று 1,008 சங்காபிஷேகமும், சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு யாக சாலை பூஜையும் நடந்தது.

தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் கோவில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு போன்றவை நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டு தோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் பலர் பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.

Tags:    

Similar News