குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது.
- அக்டோபர் 5-ந்தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.
பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர். பின்னர் அமைச்சர்கள், பக்தர்கள் மற்றும தசரா குழுக்கள் வரும் பாதை, போக்குவரத்து வசதி எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கூறினர்.
அப்போது உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். தசரா திருவிழா 26-ந்தேதி தொடங்கியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.
மேலும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தினசரி நடைபெறும்.
வருகிற அக்டோபர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்குச் சென்று அங்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.
காளி வேடம் மற்றும் சுவாமி வேடம் அணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை பின்தொடர்ந்து செல்வது இதன் சிறப்பாகும். இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.