வழிபாடு

கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

குலசேகரன்பட்டினம் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-09-26 10:33 IST   |   Update On 2022-09-26 11:22:00 IST
  • தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
  • 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதல் இடம் வகிக்கும் திருவிழாவாகும்.

தசரா திருவிழா தொடங்குவதையொட்டி நேற்று நண்பகல் காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டது.

இன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வைத்து கொடிஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. கொடிபட்டம் கோவிலுக்கு வந்ததும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜையும் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. கோவில் கொடி ஏறியதும், விரதமிருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலில் காப்பு வாங்கி தங்களது வலது கையில் கட்டினர். சிலர் பூசாரி கையினாலும் காப்பு கட்டினர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொடியேற்றம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் கட்டுப்பாடுகளுடன் நடந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் நீங்கியதையடுத்து தசரா திருவிழாவில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் தசரா திருவிழா கோலகலத்துடன் தொடங்கி உள்ளது.

தசரா திருவிழா தொடங்கியதையொட்டி கோவிலில் தினசரி காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தினசரி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும்.

ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடல், பாடல், தப்பாட்டம் கரகாட்டம், போன்ற பல்வேறு கலைஞர்களுடன் ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவது மிகவும் சிறப்பாகும்.

மாவட்ட காவல்துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், குலசேகரன்பட்டினத்தில் முகாமிட்டு பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உடன்குடி பகுதி முழுவதும் ஆங்காங்கே தசரா பக்தர்களாகவே காட்சி தருகின்றனர்.

பக்தர்கள் வந்து செல்ல வசதியாக முக்கியமான ஊர்களில் இருந்து குலசேகரன் பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News