வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

Published On 2022-06-16 05:53 GMT   |   Update On 2022-06-16 05:53 GMT
  • ஜூலை 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.

மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில், ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள இடையாற்று மங்கலத்தை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற உபயதாரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.

அதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தில் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து செல்லும் காட்சி, அக்னிசட்டி ஏந்தி பெண் பக்தர் நடந்து வருவதைப் போன்ற அழகிய சிற்பம், விரதமிருந்து அலகு குத்தி நடந்து வரும் பக்தர் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டு தரமான முறையில் வர்ணம் தீட்டும் பணி நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜகோபுரம் கட்டுமான பணிக்கு அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கட்டைகளால் ஆன சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ராஜகோபுரம் தண்ணீரால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் யாக சாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News