திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று 11 மணிநேரம் மூடப்படுகிறது
- இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணிவரை நிகழ்கிறது. அதையொட்டி இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன.
அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு கைங்கர்யம், நிவேதனம் முடிந்ததும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலேஸ்வரர் கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் மூடப்படுகின்றன. முன்னதாக துணைக் கோவில்களில் காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம்.
சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து கைங்கர்யங்கள் நடக்கும். இதைப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.