வழிபாடு

மாசி வீதியில் தங்க சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா வந்த காட்சி.

மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் தங்க சப்பரத்தில் வீதி உலா

Published On 2023-04-24 10:51 IST   |   Update On 2023-04-24 10:51:00 IST
  • பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
  • திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக நடப்பது சித்திரை திருவிழா.

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், சுந்தரேசுவரரை எதிர்த்து போரிடும் திக்குவிஜயம், மீனாட்சி அம்மன்-சுந்தரே சுவரர் திருக்கல்யாணம், திருத்தேர் வீதி உலா உள்ளிட்டவைகள் நடைபெறும்.

அதுமட்டுமின்றி திருவிழா நடக்கும் 12 நாட்களும், காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரே சுவரர் பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சி அளிப்பார்கள். இதனை காண மாசி வீதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து இரவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது. சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா நடந்தது. மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் தங்க சப்பரத்தில் மாசிவீதிகளில் உலா வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரர் திக்கு விஜயம் மே 1-ந்தேதியும் நடைபெறுகிறது. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது.

மே 4-ந்தேதியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

Similar News