நவராத்திரி 3-ம் நாள்: சிம்ம, முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா
- நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.