வழிபாடு

நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

Published On 2022-10-14 11:34 IST   |   Update On 2022-10-14 11:34:00 IST
  • 19-ந் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்.
  • 21-ந்தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆரத்தி கண்டருளினார். இந்நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடந்தது. அப்போது நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாளான 19-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார்.

அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைகிறார்.

விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News