ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- இந்த திருவிழா வருகிற 25-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
- 25-ந்தேதி காலை 10 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று காலை 5.30 மணிக்கு முதலாவது திருப்பலியும், 7 மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுகாகவும் பங்குதந்தை கிஷோக் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சதியாகப்பரின் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசு கோவிலில் இருந்து கிறிஸ்துவ கீதங்கள், இசை வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க கொடியேந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மாலை 6 மணிக்கு ஊர்வலம் கோவிலை வந்து அடைந்தது.
7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு ஜான்பென்ஷன், தலைமையில் வாணவேடிக்கை முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட டி.எம்.எஸ்.எஸ்.எஸ் பங்குதந்தை ஜான் சுரேஷ் தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5.30, 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. 25-ந் தேதி அதிகாலை 4 மணி, 5.15 மணி, 6 மணி, காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டு திருப்பலியாக நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதி உலா வருகின்றனர். திருவிழா ஏற்பாடுகளை குருசு கோவில் பங்குதந்தை கிஷோக் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்து வருகின்றனர். விழாவில் உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, பெரியதாழை, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் செய்திருந்தனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் ஜேம்ஸ் விக்டர், ரவீந்திரன், ஜாக்சன் அருள், ரஞ்சித் குமார் கருடோசா, பபிஸ்டன், சந்தீஷ்டன், சதீஷ்குமார், பெஞ்சமின் டிசூசா, பிளேவியன், ரபீஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.