தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
- தேரை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தபடி சென்றனர்.
- 3-ந்தேதி கொடிமரம் இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலய 481-ம் ஆண்டு பெருவிழாவானது கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக மறை மாவட்ட அதிபர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது.
இந்த சிறப்பு திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின், விழா குழு தலைவர் வின்சென்ட் அமல்ராஜ், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜூனன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ரவிசந்திர ராமவன்னி மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மும்மதத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பலி முடிந்து மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தியாகப்பர் மற்றும் மரியாள் தூதர் தனித்தனி தேரில் வைக்கப்பட்டு அந்த தேரை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தபடி ஆலய வாசலில் இருந்து புறப்பட்டனர். ஆலயத்தைச் சுற்றி தேர்வலம் வந்தது. இதையொட்டி ஏராளமானோர் கோவில் முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், தென்னங்கன்றுகளுடனும் நின்று பிரார்த்தனை செய்தனர்.
விழா ஏற்பாடுகளை தண்ணீர் ஊற்று, அரியான்குண்டு, தென்குடா, அக்காள்மடம், செம்மமடம், ஓலைகுடா, வேர்க்கோடு ஆகிய 7 கிராம மக்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசாரும் மற்றும் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை மாலை 6 மணிக்கு கொடி இறக்கமும், வருகின்ற 3-ந் தேதி கொடிமரம் இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.