ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
- 25-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.
- மீனவமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 2-வது திருப்பலி, 7 மணிக்கும் மதியம் 12 மணிக்கு 3-வது திருப்பலியும் ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் மக்கள் மற்றும் மீனவ மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு புனித சந்தியாகப்பர் சொரூபம் வண்ண விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு குருசு கோவில் முன்பிருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு வேனில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது..
தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் கொடிகளை அர்ச்சித்தார். பங்குதந்தை ஜான்பென்சன் தலைமையில் இரவு 7.15 மணிக்கு ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடந்தது.
கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறும். வருகிற 23-ந் தேதி மதியம் 1 மணிக்கு குருசு கோவில் பங்குதந்தை கிஷோக் தலைமையில் அன்னதானம் நடைபெறுகிறது.
முக்கிய திருவிழாவான 10-ம் நாள் வருகிற 25-ந் தேதி தேர்பவனி நடக்கிறது. அன்று அதிகாலை 4.45 மணி, 5.45 மணி, 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆலயத்திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதியுலா வருகின்றனர்.
கொடியேற்று விழாவில் பங்கு தந்தைகள் ஜோக்கின் ஜேக்கப், ஜெயக்குமார், சந்தியாகு, கிராசியுஸ் மைக்கிள், பபிஸ்டன், பாலன் பிரசாந்த், ஜாய்னஸ், ராஜன், செல்வின் மற்றும் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாழை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜாராபர்ட், சேவியர் பிராங்களின், ரேணுகாதேவி உள்ளிட்ட போலீசாரும் ஊர்காவல் படையினரும் ஈடுபட்டு இருந்தனர்.
ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை கிஷோக் மற்றும் அருட்சகோதரிகள், ஊர்நல கமிட்டியினர், பங்குமக்கள் செய்து வருகின்றனர்.