வினோத வழிபாடு: தேவாலயத்தில் அங்கபிரதட்சணம் செய்த கிறிஸ்தவ மக்கள்
- புனித தெரேசாவுக்கு அக்டோபர் மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆலயத்தில் திருவிழா ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் வெகு விமரிசையாக நடைபெறும்
புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் கேரள மாநில கண்ணூர் மாவட்டத்தையொட்டி உள்ளது.
இங்குள்ள செயிண்ட் தெரேசா தேவாலயம் தென்னிந்தியாவின் முக்கிய புனிதத் தலமாக விளங்குகிறது. புனித தெரேசாவின் திருவுருவத்தோடு வந்த ஒரு கப்பல் மாகி கடலோரம் வந்தபோது திடீரென்று அங்கிருந்து நகர மறுத்து விட்டதாம்.
இதனால், அப்பகுதி மக்கள் புனித தெரேசாவின் திருவுருவத்தைத் நம் நகரில் நிறுவி, அதற்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகத் தெரிகிறது என்று கூறியுள்ளனர். எனவே, திருவுருவம் கப்பலிலிருந்து இறக்கப்பட்டது. கப்பலும் நகரத் தொடங்கியது.
புதிதாகக் கட்டிய கோவிலில் புனித தெரேசாவின் திருவுருவம் நிறுவப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் புனித தெரேசாவுக்கு அக்டோபர் மாதத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு விழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதனையடுத்து புனித அன்னையின் அதிசய உருவம் ரகசிய அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் வழிபாட்டிற்காக 17 நாட்கள் வைக்கப்பட்டது.
இறுதி நாளில் முக்கிய நிகழ்வாக அன்னையின் உருவம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது இந்து வழிபாட்டில் உள்ளது போல் மலையாள மொழி பேசும் மக்கள் அங்கபிரதட்சணம் செய்து அன்னையை வழிப்பட்டனர்.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் வெகு விமரிசையாக நடைபெறும் விழாவில் புதுவையின் மாகி மட்டுமல்லாது அருகில் உள்ள கேரள மாநில மக்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் அங்கபிரதட்சணம் செய்து அன்னையை வழிப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.