வழிபாடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை கொடிமர பிரதிஷ்டை

Published On 2022-07-08 04:31 GMT   |   Update On 2022-07-08 04:31 GMT
  • நாளை தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை திருவிழா பூஜை, ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • 13-ந்தேதி ஆதிகேசவ பெருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலையில் மண்டல பூஜை, கொடிமர பூஜையும், நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு 72 அடி உயர கொடிமர பிரதிஷ்டை, உச்ச பூஜை, அபிஷேகம், மதியம் அன்னதானம் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு ஸ்ரீபூதபலி, அத்தாழ பூஜை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளில் தீபமேற்றும் லட்ச தீப விழா நடக்கிறது.

கொடிமர பிரதிஷ்டை செய்தால் திருவிழா எடுக்க வேண்டும் என்பது ஆகம விதிகளில் ஒன்று. அதனால் நாளை மாலை புதியதாக அமைக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட 72 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 6 நாட்கள் திருவிழா நடக்கிறது.

அதன்படி நாளை தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை திருவிழா பூஜை, ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 13-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் அரச மரத்தையொட்டிய பகுதியில் நடைபெறும். 14-ந் தேதி காலையில் ஆதிகேசவ பெருமாளுக்கு சிறப்பு ஆராட்டு கோவிலின் கிழக்கு வாசல் பகுதியையொட்டிய பரளியாற்று பகுதியில் நடைபெறும். வழக்கமாக திருவட்டார் கோவிலில் ஐப்பசி, பங்குனி மாதம் மட்டும் 10 நாள் திருவிழா நடைபெறும். இப்போது கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் நடக்கும் சிறப்பு திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News