தும்புரு நாதருக்கு பக்தர் பூஜை செய்த காட்சி. தும்புரு தீர்த்தத்துக்கு சென்ற பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்
- 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.
- பக்தர்கள் எந்தவொரு சமையல் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை அருகே சேஷாசலம் வனப்பகுதியில் தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது. தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பக்தர்களுடன் கோவிலில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலரும் புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 23 ஆயிரம் பக்தர்களும், நேற்று காலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 13 ஆயிரத்து 200 பக்தர்களும் என மொத்தம் 36 ஆயிரத்து 200 பக்தர்கள் தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தும்புரு தீர்த்தத்துக்கு சென்ற அதிகாரிகளும், அர்ச்சகர்களும் தும்புரு நாதருக்கு சிறப்புப்பூஜைகளை செய்தனர். அங்கு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி தும்புரு நாதரை தரிசனம் செய்தனர்.
உடல் பருமன், இருதயக் கோளாறுகள், பிற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் எந்தவொரு சமையல் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
பாபவிநாசனம் அணையில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதத்துறையினர் உணவுப் பொட்டலங்களை வினியோகித்தனர். நடந்து செல்லும், மலையேறும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவப் பிரிவு சார்பில் டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். அவசர ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்தனர். இதுதவிர அன்னப்பிரசாதம், சுகாதாரம், பறக்கும்படை ஆகிய துறைகளில் போதுமான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை செய்தனர். மலையேறும் பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சில இடங்களில் பறக்கும் படையினர், வனத்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களை அழைத்துச் செல்ல பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.