வழிபாடு

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் இன்று நள்ளிரவு சிம்ம குளம் திறப்பு

Published On 2022-12-10 14:27 IST   |   Update On 2022-12-10 14:27:00 IST
  • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்படுகிறது.
  • நாளை இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா நடைபெற்று வருகிறது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறும். குழந்தை பேறு இல்லாதவர்கள் கோவிலில் உள்ள சிம்ம குளத்தில் நீராடி கோவில் வளாகத்தில் படுத்து உறங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பனி, மழையில் பாதிக்காமல் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கு பிரம்மாண்டமான முறையில் தகர சீட்டு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்படுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இதற்காக சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர், ஆம்பூர், குடியாத்தம் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், வேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அனைத்து பஸ்களும், அதேபோல் திருப்பத்தூரில் இருந்து வேலூர் செல்லும் பஸ்களும் செதுவவாலை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கிவிட்டுச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கோவில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Similar News