உஷார்... நீரிழிவு நோயாளிகளுக்கு கண்புரை நோய் வாய்ப்பு அதிகம்
- அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.
- அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.
கண் புரை என்பது கண்களில் உள்ள லென்சில் ஏற்படும் மாற்றத்தால் ஒளியின் ஊடுருவல் தன்மை குறைவதால், விழித்திரை மீது விழும் ஒளியின் அளவு குறையக்கூடிய ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்.
ரத்த சர்க்கரை அதிகமாகும் போது கண்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பு. அக்யூஸ் ஹ்யூமரில் உள்ள அதிக அளவு குளுக்கோஸ் லென்ஸ் புரத மூலக்கூறில் கோவலெண்ட் இணைப்பை ஏற்படுத்தி லென்சில் ஒளிபுகாநிலையை உருவாக்குகிறது.
அக்யூஸ் ஹ்யூமர் என்பது கண்களில் உள்ள திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இது லென்சுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது.
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது லென்சில் சேரும் கிளைக்கேஷன் முடிவு பொருட்கள் அதனை வீக்கமடைய செய்து பார்வையை குறைக்கிறது.
கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை உள்ள நிலையில் லென்சில் உள்ள என்சைம் (நொதி) குளுக்கோஸை சார்பிட்டாலாக மாற்றி கண் புரைக்கு வழி வகுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது லென்சில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தம், எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள் மற்றும் ப்ரீரேடிக்கல்ஸ் கண்புரை சீக்கிரம் உருவாகச் செய்கிறது.
கூடுதலாக உள்ள நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் மாகுலர் எடிமா போன்றவை கண் புரையின் தாக்கத்தை அதிகரிக்கலாம். உயர் ரத்த சர்க்கரை அளவு லென்சில் உள்ள மென்மையான திரவ சமநிலையை சீர்குலைத்து கண் புரை ஏற்படுவதை துரிதப்படுத்தும்.
நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் பருமன், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நெடுநாள் ஸ்டீராய்டு மருந்து உபயோகித்தல், நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் பணிபுரிதல் ஆகிய காரணிகளும் இளம் வயதிலேயே கண் புரையை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கு தீர்வாக அறுவை சிகிச்சை மூலம் கண்களில் புரை அகற்றப்பட்டு, செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.