வயிற்றுப்புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தேங்காய் பால் சூப்
- கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.
- மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும்.
மணத்தக்காளி, தானாகவே தோட்டங்களில் வளரும் ஒரு கைச் செடி, இதன் இலை மற்றும் காய் மருத்துவக் குணம் வாய்ந்தது. மணத்தக்காளியின் பழம் கறுப்பாக மிளகு போல் இருப்பதால் இதனை 'மிளகு தக்காளி' என்றும் கூறுவர்.
இந்த கீரையில் ரிபோபிளோவின், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற சத்துகளும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புத் தாதுக்களும் உள்ளன.
மணத்தக்காளி வாய்ப்புண்ணை தீர்க்கக் கூடியது. வாய்ப்புண் உள்ளவர்கள் இந்த கீரையை ஒரு கைபிடி அளவு நன்றாக மென்று சாப்பிடலாம்.
இதை உணவிலும் தினம் சமைத்து உண்ணலாம். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும், மலமிளக்கும் தன்மையும் இந்த கீரைக்கு உண்டு.
இதன் இலையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள், வயிற்றில் உள்ள கட்டிகளைக் கரைக்க உதவுகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்க உதவுகிறது.
மணத்தக்காளி காய், வாந்தியைப் போக்கும். இதை உணவில் அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை- 100 கிராம்
சின்னவெங்காயம்- 20
தேங்காய்- 1/2 மூடி
அரிசி கழுவிய நீர்- 200 கிராம்
சீரகம்- 1 ஸ்பூன்
நெய்- 1 ஸ்பூன்
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை:
மணத்தக்காளி கீரை மற்றும் சின்ன வெங்காயத்தை பொடிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கீரை மற்றும் சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவி அரைத்து பாலெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேகவைத்த கீரையில் அரிசி கழுவிய நீர் மற்றும் உப்பு கலந்து ஒரு கொதி வந்ததும், தேங்காய்ப் பால் கலந்து அடுப்பை அணைத்து விட வேண்டும். நெய்யில் சீரகத்தை தாளித்து கலந்துகொள்ளவும்.
(அரிசி கழுவிய நீரில் வைட்டமின் 'பி' சத்து உள்ளதால் இது வாய்ப் புண் விரைவில் ஆற உதவுகிறது. வாய்ப் புண், வயிற்றுப்புண் மற்றும் வயிற்றில் கட்டியுள்ளவர்கள் இந்த சூப்பை அடிக்கடி தயாரித்து சாப்பிடலாம்.