சமையல்

ஆந்திரா ஸ்டைல் பூண்டு இட்லி பொடி

Published On 2024-10-18 09:07 GMT   |   Update On 2024-10-18 09:07 GMT
  • பூண்டு பொடியை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.
  • சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

சூடான இட்லி அல்லது தோசையுடன் காரமான பூண்டு பொடியை வைத்து சாப்பிடுவதற்கு யாருக்கு தான் பிடிக்காது? ஹோட்டல்களிலும், சாலையோர ரோட்டு கடைகளிலும் இந்த பூண்டு பொடியை சாப்பிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும்.

இதை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என பலரும் நினைத்தாலும் அதை முறையாக எப்படி செய்வது என்று குழப்பம் இருக்கும். அப்படி, நாம் சாப்பிட்டு மனதிற்கும் நாவிற்கு பிடித்துப்போன ஆந்திரா ஸ்டைல் பூண்டு பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப்

உளுத்தம் பருப்பு - அரை கப்

பயட்கி மிளகாய் (byadgi chilli) - 8

காய்ந்த மிளகாய் - 8

எள் - 2 தேக்கரண்டி

பொட்டுக் கடலை - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

பூண்டு பல் - 12



செய்முறை:

முதலில் அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு கடாயில் கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக வறுக்கவும்,

பின்னர், இந்த பருப்பை ஒரு தட்டில் மாற்றி வைத்து, அதே கடாயில் உளுந்தப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும்,

உளுந்தம்பருப்பு வறுப்பட்டதும், அதே தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் நாம் தயார் செய்யும் பொடிக்கு பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து எடுத்தால் கூடுதல் சுவை தரும்.

இப்போது அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில், பயட்கி மற்றும் காய்ந்த மிளகாய்யை சேர்த்து வதக்கவும். பயட்கி மிளகாய் இல்லை என்றால் 15 காய்ந்த மிளகாயை வதக்கவும்.

மிளகாய் நன்கு வதங்கியதும் எள் சேர்க்க வேண்டும். இப்போது எள் வெடிக்கத் துவங்கியதும் பொட்டு கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தட்டில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

நாம் வறுத்து வைத்தவை நன்கு ஆறிய பின்னர், மிக்சி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது சுவையான ஆந்திர ஸ்டைல் பூண்டு இட்லி பொடி தயார்.

இட்லி பொடியை இப்படி செய்வதால் குறைந்தது இரண்டு மாதங்கள் வரை சேமிக்கலாம்

சூடான இட்லி, பொடியுடன் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.



Tags:    

Similar News