சமையல்

கடையில் வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம் வெங்காய வடகம்

Published On 2023-03-07 14:45 IST   |   Update On 2023-03-07 14:45:00 IST
  • இப்பொழுதே கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது.
  • வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 2 கிலோ

வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்

பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி

கடுகு - 1 மேஜைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லித்தழை - 1 கட்டு

கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு

கரகரப்பாக அரைக்க

மிளகாய் வத்தல் - 10

சீரகம் - 2 மேஜைக்கரண்டி

பூண்டு - 1 பெரியது

செய்முறை

2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.

உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டை தோலுரித்து வைக்கவும்.

மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.

அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது.

அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.

இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.

பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.

Tags:    

Similar News