சமையல்

தேங்காய் பூரண கொழுக்கட்டை

Published On 2024-09-06 14:57 IST   |   Update On 2024-09-06 14:57:00 IST
  • தண்ணீரில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

நாளை விநாயகர் சதுர்த்தி. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பூரண கொழுக்கட்டையை சுலபமாக பக்குவமாக செய்யும் முறையை விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு - 1 கப்

தேங்காய் -1 மூடி

வெல்லம் - 150 கிராம்

ஏலக்காய் - 2

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும். பின்னர் அதனை அடிகனமான வாணலியில் ஈரம் போக வறுத்து ஆற விடவும்.

மாவு 1 கப் என்றால் 2 மடங்கு அளவு தண்ணீரில் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்தவுடன் மாவில் ஊற்றி கிளறவும். ஆறிய பின்னர் கையில் பிசைந்து உருட்டிக்கொள்ளவும். எல்லா வகை பூரண கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் நெய் ஊற்றி, அதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக கிளற வேண்டும். (கலர் மாறக்கூடாது).

பின்னர் வடிகட்டிய வெல்ல கரைசலை சேர்க்க வேண்டும். லேசாக கிளறி விடவும். சிறிது நேரத்தில் தேங்காய், வெல்லம் கெட்டியானவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.

மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ள வேண்டும். வாழையிலையில் உருண்டையை வைத்து தட்டி நடுவில் பூரணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். சூப்பரான சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

Tags:    

Similar News