செய்திகள்

வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு: திருமாவளவன் பேட்டி

Published On 2016-06-06 13:46 IST   |   Update On 2016-06-06 13:46:00 IST
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் அங்கனூரில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அரியலூர் பகுதியில் சிமெண்ட் ஆலை லாரிகளால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி நேரங்களில் டிப்பர் லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை திரும்ப நடத்த வலியுறுத்தி இந்த வாரம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேர்தல் சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்வதை தடை செய்ய வேண்டும். இதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியும்.

தமிழக அரசியலில் தி.மு.க.-அ.தி.மு.க. இணக்கமான நாகரீகமான மாற்றம் ஏற்பட எங்களது கூட்டணி முக்கிய காரணமாகும். அவர்கள் நட்புறவாக இயங்குவதை வரவேற்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவையற்றது. எங்கள் கூட்டணி தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News