செய்திகள்

காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?- கருணாநிதி கேள்வி

Published On 2016-09-06 14:12 IST   |   Update On 2016-09-07 16:47:00 IST
காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தருவது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்திலே முறையிட்டு, அதன் பிறகே தண்ணீரைப் பெற வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சம்பா சாகுபடிக்கான வேலைகளைத் தொடங்கியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள், அதற்கான தண்ணீர் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி, வேதனையடைந்து வருகிறார்கள்.

வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிச்சயமாக சம்பாவுக்கு போதுமானதல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கூடுதல் தண்ணீர் தரக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட காவேரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளர் சுவாமி மலை சுந்தர விமல்நாதன், காவேரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி. நடராசன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன், த.மா.கா. விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் “ஒரு கணக்கும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பத்து நாளைக்கு நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒரு குழுவை அமைத்து, பிரதமரை நேரில் சந்தித்து கர்நாடகத்திலிருந்து நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் பெற வேண்டும் என்றும், மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கூடுதல் தண்ணீரை உடனடியாகப் பெற வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

நேற்றையதினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்தில், “நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தேவை என்றால், 3 நாட்களுக்குள் தமிழக அரசு, காவேரி கண்காணிப்புக் குழுவை அணுகலாம். கண்காணிப்புக் குழு தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்து பத்து நாட்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள்.

தமிழக அரசு 8-4-2013 அன்று முறையிட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தான் 10-5-2013இல் இந்த காவேரி கண்காணிப்புக் குழுவை அமைக்க அறிவுறுத்தியது. இந்தக் காவேரி கண்காணிப்புக் குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது; சட்ட அங்கீகாரமும் கிடையாது; எந்த மாநிலத்தையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரமும் கிடையாது; இந்தக் குழுவே ஒரு வீண் முயற்சி.

இந்தக் கருத்தை அப்போதே நாம் வெளியிட்டிருந்தோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் 3-6-2014ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அளித்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். “காவேரி கண்காணிப்புக் குழு”வை பற்றி ஜெயலலிதாவே உயர்வாகச் சொல்லிக் கொள்ளவில்லை.

இந்தக் காவேரி கண்காணிப்புக் குழுவும் 1-6-2013 மற்றும் 12-6-2013 அன்றும் டெல்லியிலே கூடி எந்த விதமான பயனுமின்றி கலைந்தது. இந்தக் காவேரி கண்காணிப்புக் குழுவிடம் தான் உச்ச நீதிமன்றம் தமிழக அரசை மீண்டும் அணுகும்படி நேற்றைய தினம் கூறியிருக்கின்றது.

உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள உத்தரவின்படி 13 டி.எம்.சி. தண்ணீர் தான் தமிழகத்திற்குக் கிடைக்கும். ஆனால் 25 இலட்சம் ஏக்கரில் முழுமையாக சாகுபடி செய்ய தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாநில முதல்- அமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “குடிநீருக்கே இல்லை என்கிற போது, எப்படி தினமும் இவ்வளவு தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட முடியும்? கண்டிப்பாக முடியாது; தண்ணீர் திறந்து விடுவதை நாங்கள் நடைமுறைப்படுத்த முடியாது. நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் அரசு நடந்து கொள்ளும்” என்று தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரத்தில் அந்த மாநில முதல்-அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம், இறுதித் தீர்ப்பைக் கூட அல்ல, இடையில் ஒரு கருத்தைத் தெரிவித்த உடனேயே கர்நாடக மாநில முதல்- அமைச்சர் செய்தியாளர்களிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாகவும், அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் அரசு நடந்து கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் முக்கியமான இந்தப் பிரச்சனையில் மிகவும் தேவையான இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்காமல் இருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜெயலலிதா; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப்போவதாகவும் தெரியவில்லை. தமிழக அரசின் சார்பில் அடுத்து என்ன தான் செய்யப்போகிறார்கள் என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. கேட்டால், “நான் பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டேன், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டேன், என்று சொல்லிக் கை கழுவி விடுவார்கள்.

உண்மையில் பிரச்சனை தீர்வதற்கு என்ன தான் வழி, என்ன செய்யப் போகிறார்கள், விவசாயிகளின் பிரச்சனை தீருமா? தீராதா? காவேரியில் தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 13 டி.எம்.சி. தண்ணீர் என்பது போதவே போதாது என்பது அனைவருக்கும் தெரியும். அதைப் பற்றி என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்? விவசாயிகள் சங்கத்தினர் கேட்பதைப் போல சீராய்வு மனு போடப்போகிறார்களா? சீராய்வு மனு போட்டு, காவேரி கண்காணிப்புக் குழுவால் எவ்விதப் பயனும் இல்லை என்பதால், 13-5-2013க்குள் அமைத்திருக்க வேண்டிய காவேரி மேலாண்மை வாரியத்தையும் காவேரி ஒழுங்காற்றுக் குழுவையும் மூன்றாண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இப்போதாவது அமைத்திட மத்திய அரசுக்கு அழுத்தமான உத்தரவைப் பெறப் போகிறார்களா? குறைந்த பட்சம் 50 டி.எம்.சி. தண்ணீரையாவது கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவைப் பெறப் போகிறார்களா? அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்யப் போகிறார்களா? அல்லது பிரதமரிடம் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அரசியல் அழுத்தம் தரப்போகிறார்களா என்பதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? அந்த பதிலைத் தான் இன்று நாடே எதிர்பார்க்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News