செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

Published On 2016-11-21 08:03 IST   |   Update On 2016-11-21 13:37:00 IST
வங்கிகளில் மக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிகட்டு தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை விளக்கக்கூடியது. தற்போது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காமல் இப்போதும் காங்கிரஸ் கட்சி மீது குறை கூறுவதை அக்கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இடைத்தேர்தலில் கடைசி 2 தினங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளது. இருப்பினும் கணிசமான வாக்குப்பதிவு நடந்து உள்ளது. வாக்குகள் எண்ணும்போது என்ன முடிவு வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. முழுமையாக குணம் அடைந்து அன்றாட பணிகளை அவர் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ரூ.2 ஆயிரம் நோட்டுகளால் மக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். கை விரலில் மை வைத்து கேவலப்படுத்துகின்றனர். எனவே வங்கிகளில் மக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கிகள் முன்பு இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும். வடசென்னையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News