செய்திகள்

தண்டையார்பேட்டையில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.8 கோடியில் புதிய கட்டிடம்: எடப்பாடி திறந்து வைத்தார்

Published On 2017-06-24 14:28 IST   |   Update On 2017-06-24 14:28:00 IST
தண்டையார்பேட்டையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டையில் ஒரு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 28.10.2015 அன்று புரட்சித் தலைவி அம்மா துவக்கி வைத்தார். இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது இதுவரை தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்தது.

தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்த இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன், சிறந்த கல்விச்சூழலில் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், தண்டையார்பேட்டை, அரசு அச்சக திட்ட சாலை அருகில் 8 கோடி 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.



புரட்சித் தலைவி அம்மா 5.8.2016 அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியை துவக்கி வைத்தார். இந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கான நிரந்தர கட்டடம் டாக்டர் ராதா கிருஷ்ணன் நகரில் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிகமாக சென்னை, தரமணியில் உள்ள மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கி வந்தது.

தற்காலிக கட்டடத்தில் இயங்கி வந்த இந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் வகையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், தண்டையார்பேட்டை, காமராஜர் சாலை அருகில் 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும் வகுப்பறைக் கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வெற்றிவேல், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், கல்லூரிக் கல்வி இயக்குநர் டாக்டர் மஞ்சுளா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News