செய்திகள்

இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமாருக்கு மைத்ரேயன் எம்.பி. பதில்

Published On 2017-08-02 10:35 IST   |   Update On 2017-08-02 10:35:00 IST
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் பதில் அளித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்ததுபோல் ஓ.பன்னீர் செல்வமும் கிரீன்வேஸ் வீட்டில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆனால் இணைப்பு தொடர்பாக இருதரப்பிலும் இதுவரை முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இதுபற்றி ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மா.பா.பாண்டியராஜன் கூறுகையில், “சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் ஆகிய எங்களது 2 நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் தான் பேச்சுவார்த்தை தொடங்கும். ஆனால் இந்த 2 வி‌ஷயங்களுக்காக அவர்கள் பேசாததுதான் இணைப்புக்கு தடையாக இருப்பதாக” கூறினார்.

அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிதான். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்படாமல் திறந்து வைத்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் இதை ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

எடப்பாடி அணியினர் தான் எங்களுடன் வந்து பேச வேண்டும். நாங்கள் ஏற்கனவே எங்கள் தரப்பு நிபந்தனைகளை முன் வைத்து விட்டோம்.

ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும். சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். இதற்கு எடப்பாடி தரப்பில் எந்த பதிலும் இல்லாதபோது எப்படி பேச்சுவார்த்தை நடைபெறும்.

இதை திசை திருப்பும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதாவில் சேர போவதாகவும், அவருக்கு பதவி கொடுக்க போகிறார்கள் என்றும் தவறான தகவலை அவர்களது ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள்.

இது கற்பனையின் உச்சக்கட்டம். வி‌ஷமத்தனமானது. இப்படி வதந்தி பரப்புவது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ். பக்கம்தான் உள்ளனர். கட்சியும் எங்களிடம்தான் உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்கிறார். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார். யார்- யாருடன் பேசுகிறார்கள் என்று கூற முடியுமா?

நாங்கள் எங்கள் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். எடப்பாடி அணிக்குள் நிலவும் பிரச்சனை பற்றி நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் இப்போது என்ன நிலை உள்ளதோ, அதுதான் தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News