அவுரங்கசீப் கல்லறை இடிப்பு?.. தேவேந்திர பட்னாவிஸ் திட்டம்! - மகா. அரசியல் சர்ச்சை விஸ்வரூபம்
- சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் கல்லறை உள்ளது.
- ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்
400 வருடத்திற்கு முன் வாழ்ந்த முகலாய மன்னர் அவுரங்கசீப்பை முன்வைத்து மகாராஷ்டிரா அரசியல் அல்லோலகல்லோலப்பட்டு வருகிறது. சத்திரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கையை தழுவி சாவா என்ற பெயரில் விக்கி கௌஷல் நடிப்பில் இந்தி படம் ஒன்று வெளியானது.
அதில் வில்லனாக வரும் அவுரங்கசீப் இந்து மன்னர் சாம்பாஜிக்கு பல்வேறு சித்திரவதைகளை செய்யும் நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதை சமாஜ்வாதி எம்எல்ஏ அபு அஸ்மி மறைமுகமாக பேட்டி ஒன்றில் விமர்சித்தார்.
அவர் கூறியதாவது, ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்று தெரிவித்தார்.
இந்த புகழ்ச்சி மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி இடையேயும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிவசேனா இடையேயேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அபு அஸ்மி சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்தும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவரும் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்து அகற்ற வேண்டும் என்று பாஜக கூட்டணி தலைவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
நேற்று அவர் பேசுகையில், ஒளரங்கசீப்பின் கல்லறை அகற்றப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இதில் ஒரு சட்டத் சிக்கல் உள்ளது. அதாவது, காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது ஔரங்கசீப்பின் கல்லறையை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் (ASI) ஒப்படைத்திருந்தது.
இப்போது, சட்டத்தின்படி, ASI பாதுகாப்பின் கீழ் உள்ள எந்த இடத்தையும் அகற்றுவது குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியாது. எனவே கல்லறையை அகற்றுவதானால் அதை சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.