இந்தியா

மொரீசியஸ் பயணம்: தொடர்ந்து காத்திருக்கும் மணிப்பூர் மக்கள்- பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்

Published On 2025-03-11 14:49 IST   |   Update On 2025-03-11 14:49:00 IST
  • இது அடிக்கடி பறக்கக்கூடிய நேரம். பிரதமர் மோடி தற்போது மொரீசியஸ் தீவில் உள்ளார்.
  • பிரதமர் வருகைக்காக மணிப்பூர் மக்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு மெய்தி- குகி பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் வன்முறை முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங்கிற்கு எதிராக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பைரன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே வன்முறை நிகழ்ந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பிரதமர் மோடி மணிப்பூர் செல்லவில்லை. தற்போது மொரீசியஸ் தீவுக்கு சென்றுள்ளார். மொரீசியஸ் தீவின் தேசிய தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன்பின் இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடி மொரீசியஸ் சென்றுள்ள நிலையில், இது அடிக்கடி விமானத்தில் பறக்கக்கூடிய நேரம். மணிப்பூர் பிரதமர் மோடிக்காக காத்துக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

இது அடிக்கடி பறக்கக்கூடிய நேரம். பிரதமர் மோடி தற்போது மொரீசியஸ் தீவில் உள்ளார். ஆனால், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும், நிலைமை அங்கு பதற்றமாகவே உள்ளது.

பிரதமர் வருகைக்காக மணிப்பூர் மக்கள் தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வருடமாக மணிப்பூர் சென்று அவர் மறுப்பது, உண்மையிலேயே மணிப்பூர்மக்களை இழிவுப்படுத்துவதாகும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News