நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கு: டி.ஜி.பி. ராமசந்திரா ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு
- 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது நடிகை பிடிபட்டார்.
- விமான நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகையின் தந்தை டிஜிபி ரேங்க் அதிகாரி என்பதால், விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பிக்க தந்தை பெயரை பயன்படுத்தி பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் நெறிமுறைகளை பயன்படுத்தியது தொடர்பான உண்மையை கண்டறிய ராமச்சந்திரா ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.
தனது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தி வந்ததில் இவருக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? இவரது பெயர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்த உண்மையை கண்டறிய கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா விசாணை நடத்துவார். ராமச்சந்திரா ராவிடம் விசாணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
மேலும் விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் வழங்குமாறு டிஜிபி, ஐஜி, செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரும்போது ரன்யா ராவ் பிடிப்பட்டார். இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 2.67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.