இந்தியா

ஹோலி பண்டிகையில் வண்ணப்பொடியை பிடிக்காதவர்கள் தார்ப்பாய் அணிந்து கொள்ளலாம்- பா.ஜ.க. பிரமுகர்

Published On 2025-03-12 07:51 IST   |   Update On 2025-03-12 07:51:00 IST
  • ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது.
  • வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.

அலிகார்:

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.

அதனால், பிரச்சனைகள் எழக்கூடாது என்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகள் தொழுகை நேரத்தை 1 மணி நேரம் தாமதமாக, அதாவது பகல் 2 மணிக்கு நடத்துமாறு லக்னோவில் உள்ள ஈத்கா மசூதியின் இமாம் கேட்டுக்கொண்டுள்ளார். தொலைதூரத்துக்கு செல்லாமல், அருகில் உள்ள மசூதியிலேயே தொழுகை நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.

சம்பல் நகரில், இந்துக்கள் பகல் 2.30 மணிவரை ஹோலி கொண்டாடுவது என்றும், அதன்பிறகு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அலிகார் தலைமை முப்தி காலித் ஹமீத், ஹோலி பண்டிகை அமைதியாக நடக்க முஸ்லிம்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வண்ணப்பொடிகள் தூவும் பகுதி வழியாக செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, ஹோலி பண்டிகை தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்த யோசனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உயர் அதிகார ஆலோசனை குழு தலைவர் ரகுராஜ் சிங். இவர், இணை மந்திரிக்கு சமமான அந்தஸ்தில் இருப்பவர்.

ரகுராஜ் சிங் கூறியதாவது:-

ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் தொழுகை காரணமாக, மாநில அரசு உஷார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் சிலர் ஆட்சேபனை எழுப்பி வருகிறார்கள்.

ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது. சனாதன தர்ம நம்பிக்கை சார்ந்த விஷயம். வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.

அன்றைய தினம், மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடுவதுபோல், முஸ்லிம் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதுபோல், முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட 'ஹிஜாப்' அணியலாம்.

அப்படி அணிந்துகொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லலாம். அவர்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாது. எளிதாக தொழுகை நடத்தலாம். இந்துக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரகுராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டுக்குள் இருங்கள்

இதுபோல், சமீபத்தில் சம்பல் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார்.

''வண்ணப்பொடிகளை பிடிக்காதவர்கள், வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். ஹோலி பண்டிகை, ஆண்டுக்கு ஒருதடவை தான் வருகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை, ஆண்டுக்கு 52 தடவை வருகிறது'' என்று அவர் கூறினார்.

அவரது கருத்துக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News